பதிவு செய்த நாள்
27
ஜூன்
2020
10:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி தேர் மற்றும் தரிசன விழா நடக்க இருந்தது. இதில் பங்கேற்க உள்ள தீட்சர்களுக்கு எடுத்த பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதியானதால் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிதிருமஞ்சன விழா கடந்த 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இன்று தேர் திருவிழாவும், நாளை தரிசனமும், கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் நடத்தவும், 150 தீட்சிதர்கள் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
ஆனால், பங்கேற்க இருந்த அனைத்து தீட்சிதர்களுக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை கட்டாயம் என சப் கலெக்டர் விசுமகாஜன் தெரிவித்திருந்தார். அதன் பேரில், மருத்துவ குழுவினர் பரிசோதனை எடுத்தனர். அதில், கீழவீதியில் ஒருவர், வடக்கு சன்னதியில் ஒருவர் என இருவருக்கு தொற்று உறுதியானது. அவர்களை ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறையினர் அழைத்து சென்றனர். நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தீட்சிதர்களுக்கு தொற்று உறுதியானதால், கோவிலுக்குள் செல்ல 5 தீட்சிதர்களுக்கு மட்டு மே அனுமதி அளிக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் உறுதியாக தெரிவித்தார். இதனால் கீழ வீதியில் முற்றிலும் தடை ஏற்படுத்தப்பட்டது. கீழ சன்னதியின் முகப்பும் தடுப்பு கட்டப்பட்டு டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இருந்தும் தீட்சிதர்களின் கோரிக்கை ஏற்று, ஆனிதிருமஞ்சன விழாவை கோவிலுக்குள்எளிமையாக நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தரிசன விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.