பதிவு செய்த நாள்
14
மே
2012
11:05
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கடலங்குடி வரதராஜ பெருமாள் @காவிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான சுவாமி சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கடலங்குடியில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவில் சிலைகளுடன், பிறகோவில் சிலைகளும் சேர்த்து, 31 ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பின்றி தனி அறையில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம், கோவிலின் அர்ச்சகர்களான வீரராகவ பட்டாச்சாரியாரும், அவரது உதவியாளர் சுந்தர்ராஜனும் பூஜைகளை முடித்து விட்டு, கோவில் கதவை மூடிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை, வீரராகவ பட்டாச்சாரியார் கோவில் கதவை திறந்து பார்த்த போது, தனி அறை கதவுகள் உடைக்கப்பட்டு புத்தமங்கலம், கல்யாணசோழபுரம், நாராயணமங்கலம், ஆத்தூர் கோவில்களுக்கு சொந்தமான 2.5 அடி உயரமுள்ள லட்சுமி நாராயண பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமி தேவி, ருக்மணி, சத்தியபாமா, வரதராஜ பெருமாள் ஆகிய ஏழு சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின் பேரில், மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன சிலைகள் குறித்து துப்பு துலக்க, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.