பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
ஒருவரை விட ஒருவர் அழகு, குணம், படிப்பு, பணம், பண்பு என மேலிட்டிருப்பது உலகத்தின் இயல்பு. ஆனால், தன்னை விட அழகானவர்களையோ, பண்பாளர்களையோ பார்த்து பொறாமை கொள்வது தவறு. ஒருவரை பார்த்து, அவரைப் போல் தன் அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ளலாமே தவிர, பொறாமை கொள்ளக் கூடாது என்பதை, அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா மூலம், உலகுக்கு உணர வைத்தனர் முப்பெரும் தெய்வங்கள். அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் தெற்கிலுள்ள வனப்பகுதியில் தங்கியிருந்தார். தனக்கு சிவன், திருமால், பிரம்மாவைப் போல, சகலத்திலும் சிறந்த குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள் அனுசூயா. அதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். தவம் என்றால், கண்ணை மூடி தியானத்தில் இருப்பதல்ல... ஒருவருக்கு உலகில் என்ன பணி வாய்க்கிறதோ, அதை சிரத்தையுடன் செய்தால், அதுவே தவம். அனுசூயாவுக்கு ஒரே பணி தான்; கட்டிய கணவரின் மனம் கோணாமல் நடப்பது! தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்த அவள், அவரை தினமும் வணங்கிய பிறகே பணி களைத் துவக்குவாள். அவரது பாதத்தைக் கழுவி கிடைக்கும் நீரை, தன் தலையில் தெளித்துக் கொள்வாள். கணவர் மனதுக்கு மாறாமல் நடந்ததால், "பதிவிரதை என்ற அந்தஸ்து பெற்றாள். இத்தகைய பெண்களுக்கு தெய்வம் கவுரவம் அளிக்கும். பதிவிரதையான அவளது விருப்பப்படி, மூன்று குழந்தைகளை அருள, மும்மூர்த்திகள் முடிவு செய்தனர். அதாவது, தாங்களே அவளுக்கு குழந்தைகளாக பிறக்க முடிவெடுத்தனர். இதற்காக, தங்கள் தேவியரின் மனதில் பொறாமைத்தீயை மூட்டினர்.
இந்த உலகத்திலேயே அனுசூயா தான் பதிவிரதை... என்று அவர்கள் காதில்படும்படி பேசினர். அப்படியானால், நாங்கள், உங்கள் சொல் கேட்பதில்லையா? என தேவியர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட, அனுசூயாவின் பதிவிரதா தன்மையை நீங்களே புரிந்து கொள்வீர்கள்... என்ற தெய்வங்கள், அவளது குடிசைக்கு சந்நியாசிகளாக வேடமிட்டு வந்தனர். பெண்ணே... எங்களுக்கு உணவளிக்க வேண்டும். ஒரு நிபந்தனை...நீ நிர்வாணமாக உணவளித்தால் தான் ஏற்போம்... என்றனர். இக்கட்டான சூழலிலும் கலங்காதவர்களே ஞானிகள். அனுசூயா அந்த ரகத்தில் அடக்கம் என்பதால், அவள் சற்றும் கலங்கவில்லை. தன் கணவரின் பாதத்தீர்த்தத்தை எடுத்து, அந்த துறவிகள் மேல் தெளித்தாள். அவர்கள் குழந்தைகளாகி விட்டனர். குழந்தைகளைப் பார்த்ததுமே தாய்மையுணர்வு பொங்கி பால் சுரந்தது. நிர்வாண நிலையில் அவர்களுக்கு பாலூட்டினாள். தங்கள் கணவன்மாரின் நிலையால் பயந்து போன தேவியர், அனுசூயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டினர். இதனிடையே, அத்திரி முனிவர் அங்கு வந்தார். தெய்வங்களே தனக்கு பிள்ளையானது கண்டு மகிழ்ந்த அவர், குழந்தைகளை ஒன்று சேர்த்தார். மூன்று முகம், இரண்டு கால்கள் கொண்ட குழந்தையாக அது மாறியது. அக்குழந்தைக்கு தத்தாத்ரேயர் என பெயரிட்டார். தங்கள் தேவியரின் பொறாமை அழிந்ததால், முப்பெரும் தெய்வங்களும் அவர்கள் முன் தோன்றினர். தங்கள் பிரதிநிதியாக தத்தாத்ரேயர் உலகை பரிபாலிப்பர் என்றனர். இவரது பிறப்பின் மூலம், உலகில் பிறந்த எல்லாருமே, ஏதோ ஒருவகையில் மேம்பட்டுள்ளனர். எனவே, அவர்களைப் பார்த்து பொறாமைப்படவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ கூடாது என்பதும், எல்லாரும் உயர்ந்தவர்களே என்பதும் உணர வைக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்திலுள்ள ரிஷிகேஷத்தில், சிவானந்த ஆசிரமம் அருகில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. சென்னை கந்தாஸ்ரமத்தில் சன்னிதி இருக்கிறது.