காரைக்கால் : காரைக்காலில் வெகு விமர்சியாக நடைபெறும் மாங்கனி திருவிழா, இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின்றி, எளிய முறையில் நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.இந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, மாங்கனி திருவிழா பக்தர்களின்றி எளிய முறையில் நடைபெற்றது.கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. 2ம் தேதி காலை காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும்.
நேற்று முன்தினம் பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.நேற்று மாங்கனி திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் நான்கு திசையிலும் வேதபாராயணங்கள் எதிரொளிக்க, மேள தாளம் முழுங்க காலை 11.30 மணிக்கு பத்மாசனம் அமர்ந்த விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளினர். அப்போது சிவபெருமானுக்கு மாங்கனி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கோவிலை சுற்றி வந்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் உட்பிரகாரத்தில் மாங்கனி வீசப்பட்டது. விழாவில் அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் அரஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதார்ஷ், அறங்காவலர் குழு தலைவர் கேசவன் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். விழாவை பக்தர்கள் வீட்டில் இருந்தே கண்டுகளிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் (www.karaikaltemples.com) என்ற இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்தது.