பதிவு செய்த நாள்
05
ஜூலை
2020
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல, மாவட்ட கலெக்டர் கந்தசாமி, தடை விதித்துள்ளதால், நேற்று, மாட வீதி மற்றும் கிரிவலப்பாதை, பக்தர்களின்றி வெறிச்சோடியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். ஆனி மாத பவுர்ணமி திதி நேற்று, மதியம், 12:02 முதல், இன்று காலை, 10:58 மணி வரை உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 20 முதல், கோவிலினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், ஆறு கால பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. அதனால், பங்குனி, சித்திரை, மற்றும் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கும், தடை விதித்து, மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டிருந்தார். இதனால், நேற்று பக்தர்கள் யாரும் பவுர்ணமி கிரிவலம் செல்ல முடியவில்லை. இதனால், கோவில் மாட வீதி, கோவில் வளாகம், கிரிவலப்பாதைகள் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.