பதிவு செய்த நாள்
10
ஜூலை
2020
12:07
ஆவடி, நம் நாளிதழின் விழிப்புணர்வு கட்டுரைகளால், ஆவடி அருகே உள்ள கோவில் குளம், இரண்டாவது முறையாக, துார் வாரி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை, ஆவடி, கோவில்பதாகையில், பழமையான சுந்தரராஜப் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவி லின் முன்புறம், 60 சென்ட் பரப்பில், திருக்குளம் உள்ளது. இது, துார் வாரப்படாமல், உரிய பராமரிப்பின்றி காணப்பட்டது.
துார்ந்து காணப்பட்ட, பல நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, அதன் முக்கியத்துவம் குறித்து, நம் நாளிதழில், களமிறங்குவோம் நமக்கு நாமே என்ற தலைப்பில், கடந்தாண்டு, தொடர் கட்டுரைகள் வெளியாகின.இதன் எதிரொலியாக, இந்த குளத்தை துார் வார, மா.பா.அறக்கட்டளை சார்பில், 44 லட்சம் ரூபாயை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.மேலும், அரசு சார்பில், 56 லட்சம் ரூபாய் உட்பட, 1 கோடி ரூபாய் செலவில், 5 அடி ஆழத்திற்கு, குளம் துார் வாரப்பட்டது.இதையடுத்து, வடகிழக்கு பருவமழை பெய்தும், குளத்தில் போதிய நீர் தேங்கவில்லை.இந்நிலையில், குளத்தை, மேலும், 10 அடி ஆழத்திற்கு துார் வாரி, 30 அடி ஆழம் உடைய குளமாக மாற்ற, கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, துார் வாரும் பணி, தீவிரமாக நடக்கிறது. அறநிலையத் துறை சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஜூனில் துார் வாரும் பணிகள் துவங்கின.கொரோனா பரவல் காரணமாக, பணிகளில் தடை ஏற்பட்டது. இருப்பினும், குறைந்த தொழிலாளர்களுடன் பணிகள் நடந்து வருகின்றன.குளம் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், இந்தாண்டு, அதிகப்படியான மழைநீரை தேக்கி வைக்க முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதியில் நீர்மட்டம் உயர முக்கிய நீராதாரமாக, இந்த குளம் விளங்கும் எனவும், கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.