பதிவு செய்த நாள்
10
ஜூலை
2020
12:07
புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
புதுச்சேரி அருகே, திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, கடந்தாண்டு ஜூன் 23ம் தேதியன்று, சதய நட்சத்திரத்தில் நடந்தது. கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு தின விழா, சதய நட்சத்திரமான நேற்று நடந்தது. விழாவில், உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸில் இருந்து விடுபடவும், மேற்கொண்டு பரவாமல் இருப்பதற்காகவும், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் இருப்பதற்காகவும், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பஞ்சஸூக்த ஹோமம், பாரமாத்மிக ஹோமம், பிராயச்சித்த ஹோமம், மூலமந்திர ஹோமம், கூஷ்மாண்ட ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நேற்று காலை நடந்தது. பின், வலம்புரி மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமர், ஸ்ரீவாரி வேங்கடாசலபதி, 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு விசேஷ அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், வாசுதேவ பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்கள் பூஜைகளை செய்தனர்.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, சிறப்பு பூஜையில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.விழா ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பழனியப்பன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.