பதிவு செய்த நாள்
10
ஜூலை
2020
03:07
அவிநாசி: கோவில் திறப்பு தொடர்பான அறிவிப்பு வருவதற்கு முன்பே, வழிகாட்டி விதிமுறை அறிவிப்பு, கோவில்களின் முன் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், கடந்த 3 மாதமாக கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து கோவில்களிலும் நோய் தொற்று பரவலைத் தடுக்க, கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்த அறிவிப்பு, கோவில்களின் முன் வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியுள்ள விபரம்; தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு, கோவிலில் அனுமதியில்லை. 100 மீட்டர் அல்லது, 1025 சதுர அடிக்கு, 20 க்குட்பட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள், கிருமிநாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தும், கால்களை நீரில் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள், கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். திருக்கோவில் வளாகத்திற்குள் கட்டாயம், 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். சுவாமி சிலை மற்றும் கோவில் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். திருக்குளத்திற்கு செல்ல அனுமதியில்லை.
பிரசாத கடைகளில் பெறப்படும் பிரசாதங்களை திருக்கோவில் வளாகத்தில் உண்ண அனுமதியில்லை. கோவில் வளாகத்திற்குள் எச்சில் உமிழ தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை, அதன் பாதுகாப்பு இடத்தில் பக்தர்களே சுயமாக வைத்து, இருந்த அணிந்து செல்லவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். கோவில்களில் நடைபெறும் பூஜை அபிஷேகம் மற்றும் உற்சவங்களின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கோவிலில், திருமணங்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஒரு திருமணம் என்ற முறையில் 50 நபர்களுக்கு மேற்படாமல், சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச பிரச்னை தொடர்பான நோய், இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் கோவில் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.