செஞ்சி: மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை என அறங்காவலர் தெரிவித்துள்ளார்.
செஞ்சி, மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கோவில்களில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகம் வரும் கோவிலாக மேலச்சேரி பச்சையம்மன் கோவில் உள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே உள்ள இந்த கோவிலின் பச்சையம்மனை தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
இவர்கள் ஆடி மாதத்தில் வெள்ளி கிழமையில் இங்கு பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்துகின்றனர். ஆடிமாத வெள்ளி கிழமைகளில் 20 ஆயிரத்திற்க்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். ஆடி மாதத்தில் சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுப்பதற்காக பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களுக்கு தடை விதித்துள்ளனர். எனவே மேலச்சேரி பச்சை அம்மன் கோவிலுக்கும் தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் இந்த ஆண்டு ஆடி மாத வழிபாட்டிற்கு கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் பரம்பரை அறங்காவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.