பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
12:07
பல்லடம்: கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய ’கருப்பர் கூட்டம்’ அமைப்புக்கு, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீப காலமாக, இந்து மதத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி பேசியது, இந்து மதத்தினர் மட்டுமன்றி, மாற்று மதத்தினர் மத்தியிலும் முகம் சுழிக்க வைத்துள்ளது. கவசம் என்பது உடல் உறுப்புகளை காக்கும்படி முருகப்பெருமானை நினைத்து வேண்டுவதாகும். இதுபோன்று இந்து மதத்தில் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் கவசங்கள் உள்ளன. கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்திய நபர், இதர தெய்வங்களையும் ஆராய்ச்சி செய்து அவற்றையும் ஆடியோவாக வெளியிடட்டும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், சர்ச்சைக்குரிய இச்செயல் மிக கேவலமாக உள்ளது. தமிழகத்தில் மத கலவரங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்து மதம் சார்ந்த தலைவர்கள், அமைப்பினர் ஒன்று சேர்ந்தால், இது மாபெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதால், அரசு உடனடியாக தலையிட்டு இதுபோன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மேலும், இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.