அன்னூர்: ’இந்து மத உணர்வை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பதுவம்பள்ளி ஆதீனம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். கருப்பர் கூட்டம் என்ற ’யூ டியூப்’ சேனலில், கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து பதிவு வெளியாகியுள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பதுவம்பள்ளி, முக்கண்ணீஸ்வரர் கோவில், ஆதீனம் ராமலிங்க சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கை : பாரத நாட்டு கலாச்சாரம் உலகிலேயே தொன்மையானது. முதன்மையானது. இந்த கலாச்சாரத்தின் வழி வந்ததுதான் முருகப் பெருமான் வழிபாடு. முருகப் பெருமானை வழிபடும் வகையில் பாடப்பட்ட கந்தர் சஷ்டி கவசம், பல கோடி இந்துக்களால் முருகர் கோவில்களில் பாடப்படுவது. அதை ஆபாசமாக சித்தரித்து பேசுவது, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகும். இது கண்டிக்கத்தக்கது. அரசு இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.