பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
புதுச்சேரி : கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் வந்தது கைகேயிக்குதான் என, கம்பன் கழகம் சார்பில் நடந்த மேல் முறையீட்டு பட்டிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பு கூறினார். புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா 11ம் தேதி துவங்கியது. விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. 2ம் நாள் மாலை நிகழ்வாக கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கைகேயி, வாலி, ராமன் ஆகியோர் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இறுதியில் ராமன் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பட்டிமன்றம், வேல்சொக்கநாதன் அறக்கட்டளை சார்பில், நேற்றுமுன்தினம் (13ம் தேதி) மாலை நடந்தது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் வேல் சொக்கநாதன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தலைமைச் செயலர் சத்தியவதி, பேராசிரியர் ராஜகோபால் ஆகியோர் நடுவராயமாக இருந்தனர். நோக்கர்கள் சார்பில் சண்முகவடிவேல், ராமன் என்ற தலைப்பில் ராமலிங்கம், கைகேயி என்ற தலைப்பில் பர்வின் சுல்தானா, வாலி என்ற தலைப்பில் சாரங்கபாணி ஆகியோர் விவாதம் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், இந்த விவாதத்தின் மீது இறுதியாக தீர்ப்பளித்து பேசுகையில் "கைகேயிக்கு வந்தது மனமாற்றம் என கம்பனே கூறிவிட்டார். ஆனால் ராமனுக்கும், வாலிக்கும் வந்த மாற்றம், மன மாற்றம்தானா என்பதை அடிப்படையிலே நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, கைகேயிக்கு வந்தது மன மாற்றம், வாலிக்கு குழம்பிய அறிவு தெளிவு பெற்றது. ராமனுக்கு இருந்த ஆன்ம மயக்கம் தீர்ந்தது. எனவே கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, உண்மையில் கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம், கைகேயிக்கு வந்தது தான் என தீர்ப்பளிக்கிறேன் என பேசினார்.