பதிவு செய்த நாள்
19
ஜூலை
2020
03:07
திருப்பூர்:கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதால், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவ்வகையில், முருக பக்தர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு: கண்டீஸ்வரி, பொங்கலுார்: கறுப்பர் கூட்டம் என்ற ஒரு மூடர் கூட்டம். கந்தர் சஷ்டி கவசம் பற்றி பேசியது, மன வேதனையை அளிக்கிறது. அது வெறும் பாடல் அல்ல. அது இந்துக்களின் ஆன்மா. பிற மதத்தை பற்றி யாராவது கேலி செய்தால் அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா? இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் அவதுாறு செய்யலாம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். அவர்கள் முருகப்பெருமானின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
தங்கமணி, கண்டியன் கோவில் ஆதீனம்:இந்து மத மக்கள் ஒன்றிணைந்து அவர்கள் மீது தகுந்த பதிலடி தருவார்கள். தமிழக அரசு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல், இதுபோல் இந்துக்களை, தமிழ் கடவுளை இழிவாக யாரும் பேசக்கூடாத வகையில் தகுந்த பாடம் கற்பிக்கப் படவேண்டும். ஆண்டாளைப் பற்றி, ராமாயணத்தை பற்றி இழிவாகப் பேசினார்கள். தற்போது முருகனையும் வம்புக்கு இழுத்து உள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சோமசுந்தர சிவம், சோளீஸ்வர சுவாமி கோவில், வெள்ளகோவில்:இணையதளத்தில் வெளியிட்ட கந்த சஷ்டி விளக்கங்கள் இந்துக்களின் மனதை புண்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கிலும், உள்ளது. இதனை இந்துக்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும் வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற இழிவான செயல்களை செய்யும் இணையதளங்களை தடை செய்யவும், இணையதள உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணசாமி, வெள்ளகோவில்:இந்துக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில், கந்தர் சஷ்டி கவசத்தை சில விஷமிகள் தவறாக சித்தரித்து உள்ளனர். முருகப்பெருமானின் கந்தர் சஷ்டி கவசம் படித்தால் வரும் சோதனைகள் விலகும், மன கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் இந்துக்கள் அனைவரும், கிருத்திகை மற்றும் சஷ்டி நாட்களில் விரதமிருந்து இந்த பாடலை பாடி கடவுளின் தார்மீக அருளைப் பெற்று வருகின்றனர். இதுவரை பொறுமையாக இருந்த இந்துக்கள் மனதில் தற்போது எழுச்சி பெற்றுள்ளது.
-ஹரிஹரன், இந்து மக்கள் கட்சி: தமிழர்கள் என்ற போர்வையில், தமிழ் கடவுள் முருகனை ரொம்ப இழிவுபடுத்தி பேசியுள்ளனர். இதன் காரணமாக, இந்துக்கள், முருக பக்தர்களின் மனம் ரொம்ப புண்பட்டுள்ளது. தற்போது, அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மூலமாக, எதிர்காலத்தில், இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தி பேச மற்றவர்கள் தயங்க வேண்டும்.
ராஜமாணிக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத், பல்லடம்:தமிழகத்தில் தொடர்ந்து இந்து விரோத போக்கு நடக்கிறது. இதை பற்றி அரசு கவலைப்படுவதில்லை. கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி விமர்சித்து, அனைவரின் மனதையும் புண்படுத்தியுள்ளனர். இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். விமர்சனம் செய்தது தொடர்பாக, ஓவியர் ஒருவர், மற்ற மதங்களை பற்றி பேசுவோம் என்று சொன்ன உடனே, அவரை கைது செய்தனர். குற்றம் என்று தெரிந்தே செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.