பதிவு செய்த நாள்
20
ஜூலை
2020
05:07
கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் பட்கர் மக்களின் குல தெய்வமான, ஹிரோடைய்யா திருவிழா, நடப்பாண்டு, எளிமையாக கொண்டாடப்பட்டது.
தொதநாடு சீமைக்கு உட்பட்ட, கடநாடு, ஒன்னதலை, கம்பட்டி, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி. மணியட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள ஹிரோடைய்யா கோவில்களில் இருந்து, பூசாரிகள் உட்பட, 10 பேர் ஊர்வலமாக பனகுடி எனப்படும் வனக் கோயிலுக்கு, ஊர்வலமாக சென்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடை திறக்கப்படும் கோவிலில், கல்லில் பிரம்புகளை உரசி, அதிலிருந்து வெளியேறும் தீப்பொறியில் தீபம் ஏற்றப்பட்டது. பிறகு, முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசுமாட்டின் பசும்பால் மற்றும் வனப்பகுதியில் சேகரித்த கொம்புத்தேன் ஆகியவற்றைக் கொண்டு ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பிறகு, சங்கொலி எழுப்பிய பக்தர்கள், மீண்டும் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு திரும்பினர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலையில், கொரோனா காரணமாக, அனைத்து கிராமக் கோயில்களிலும், 10க்கும் குறைவானவான பக்தர்களே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஹரிக்கட்டு எனப்படும், தானிய திருவிழா இன்றும், மிக எளிமையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், ஹிரோடைய்யா திருவிழா நாட்களில், படுகர் கிராமங்கள் குதூகலமாக காணப்படும் நிலையில், நடப்பாண்டு, கொரோனா தொற்று காரணமாக, உற்சாகம் இழந்து காணப்பட்டது.