பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
03:07
அயோத்தி : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கட்டப்பட உள்ள கோவிலுக்கான பூமி பூஜை, ஆக., 5ல் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பூமி பூஜையின் போது, கருவறை அமையும் பகுதியில், 40 கிலோ எடையுள்ள, வெள்ளி செங்கல், அடிக்கல்லாக பயன்படுத்தப்பட உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து அமைக்கப்பட்ட அறக்கட்டளை, கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளது.கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, ஆக., 5ல் நடக்கும் என்றும், இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாகிகள், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் மற்றும் மகந்த் கமல் நயன் தாஸ் கூறியதாவது:கோவிலுக்கான பூமி பூஜைகள், ஆக., 3ம் தேதியில் இருந்து, மூன்று நாட்கள் நடைபெறும். ஆக., 5ம் தேதி பகல், 12:13 மணிக்கு, பூமி பூஜை நடக்க உள்ளது. பல்வேறு பண்டிதர்கள், ஜோதிடர்களின் ஆலோசனையின்படி, இந்த நேரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்படி அழைப்பு விடுத்துஉள்ளோம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.பூமி பூஜையின்போது, கருவறை அமைய உள்ள பகுதியில், 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல், அடிக்கல்லாக பயன்படுத்தப்படும்.
கோவில் அமைய உள்ள பகுதியில் நடந்த அகழாய்வின்போது கிடைத்த, 400க்கும் மேற்பட்ட பல நுாற்றாண்டுகள் பழமையான பொருட்கள், மக்களின் காட்சிக்கு வைப்பதற்காக, சர்வதேச தரத்திலான அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாத்து வைக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.சதீஷ் சிந்துஜி சம்பார்கர், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, தலா, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
அரசியல் : ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடக்க உள்ள நிலையில், இது தொடர்பான அரசியல் வாக்குவாதங்களும் துவங்கியுள்ளன.கோவில் கட்டுவதால், கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் என, தேசியவாத காங்., தலைவர், சரத் பவார் கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர், திக்விஜய் சிங்கும் விமர்சித்திருந்தார்.இதற்கு, பா.ஜ., மூத்த தலைவர், உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அல்ல; ராமருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், என, உமா பாரதி கூறியுள்ளார்.இந்த நிலையில், மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்., மற்றும் காங்.,குடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ள, சிவசேனா, மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு ஆதரவு அளிப்பதாக, அந்தக் கட்சி கூறியுள்ளது.