பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
03:07
சென்னை, ஆடி அமாவாசையான நேற்று, சென்னை, புறநகரில் உள்ள நீர்நிலைகளில், ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.ஆடி மாதத்தில், கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை, ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாளே, ஆடி அமாவாசை.இந்த நாளில், மறைந்த முன்னோர், அவர்களது சந்ததியர் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷ நிவர்த்தி பெற, இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவர் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசையில், நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது, மிகவும் சிறப்பாகும். தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று, முன்னோர்களுக்கு, பிதுர் கடன் எனும் தர்ப்பணம் கொடுத்தால், அது அவர்களை, நேரடியாக சென்றடையும் என்பதும் ஐதீகம்.ஆடி அமாவாசையான நேற்று, தளர்வுடன் கூடிய ஊரடங்கு இருப்பதால், கோவிலுக்கு அருகில் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில், பலரும் தர்ப்பணம் கொடுத்தனர். பலர், வஸ்திர தானம், அன்னதானம் செய்து முன்னோரை வழிபட்டனர். - நமது நிருபர் -