பதிவு செய்த நாள்
21
ஜூலை
2020
03:07
தர்மபுரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி கடைவீதியில் உள்ள முத்துகாமாட்சி அம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெளிபேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி.,சாலை அங்காளம்மன் கோவில், மொடக்கேரி ஆதிசக்திசிவன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
ஆற்றங்கரையில்: ஆடி அமாவாசையில், நீர்நிலைகளில் மக்கள் நீராடி, கோவிலில் மோட்ச தீபம் ஏற்றுவர். ஊரடங்கால், நேற்று கோவில்களில் பக்தர்கள் வழிபட முடியாமல் ஏமாற்றமடைந்தனர். கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இருமத்தூர், டி.அம்மாபேட்டை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையில், சமூக இடைவெளியுடன் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
குளக்கரையில் வழிபாடு: சூரியன் தெற்கு திசை நோக்கி நகரும் காலமான ஆடி மாத அமாவாசை நாளில், மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினால், சந்ததியினருக்கு மூதாதையர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்நாளில், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். அதன்படி நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஊரடங்கால், கோவில் குளக்கரையில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு மக்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமானோர், மூதாதையார்களுக்கு திதி கொடுத்தனர்.