பதிவு செய்த நாள்
25
ஜூலை
2020
02:07
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் விளக்கு பூஜை நேற்று நடந்தது. சுண்டப்பாளையம், மில்கேட் மாகாளியம்மன் கோவிலில், அதிகாலை அம்மனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காளி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். கொண்டயம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு, செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. குளத்துப்பாளையம் கன்னித்தாய் கோவிலில், மலர் அலங்காரத்தில், கன்னித்தாய் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.