பதிவு செய்த நாள்
15
மே
2012
11:05
நமக்கு இடைஞ்சல் தருபவர்களால் ஏற்படும் தொல்லை நீங்கவும், எதையும் தைரியத்துடன் எதிர்நோக்கவும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் எண்ணி இந்தப் பதிகத்தைப் பாடுங்கள். இதை இயற்றியவர் ஞானசம்பந்தர்.
செய்யனே திருஆலவாய் மேவிய
ஐயனே அஞ்சல் என்று அருள் செய்வானைப்
பொய்யராம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று பாண்டியற்கு ஆகவே.
சித்தனே திருஆலவாய் மேவிய
அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
பத்திமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை
எக்கராம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே.
சிட்டனே திருஆலவாய் மேவிய
அட்ட மூர்த்தியனே அஞ்சல் என்று அருள்
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
பட்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
நண்ணலார் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
பண்ணியல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே.
தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
செங்கண் வெள்விடையாய் திருஆலவாய்
அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை
கங்குலார் அமண்கையர் இடும் கனல்
பங்கம் இல் தென்னன் பாண்டிற்கு ஆகவே.
தூர்த்தன் வீரன் தொலைத்து அருள்ஆலவாய்
ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
தாவினான் அயன் தான் அறியா வகை
மேவினாய் திருஆலவாயாய் அருள்
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்
பாண்டிமன் தென்னன் பாண்டியற்கு ஆகவே.
அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு
ஒப்ப ஞான சம்பந்தன் உரை பத்தும்
செப்ப வல்லார் தீது இலாச் செல்வரே.