பதிவு செய்த நாள்
04
ஆக
2020
01:08
காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக நடைபெறும் மாங்கனி திருவிழா, இந்தாண்டு கொரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கடந்த ஜூலை 1ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், மறுநாள் திருக்கல்யாணம், பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், சிவபெருமான் பிச்சாண்டவராக அவதரித்து வீதி உலா வரும் போது மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி அனைத்தும் கோவில் உட்பிரகாரத்தில் மிக எளிய முறையில் நடந்தது.விழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.
இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வாணை, சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாங்கனித்திருவிழா விடையாற்றி உற்சவத்தை அனைத்து பக்தர்களும் கண்டுகளிக்கும் வகையில் www.karaikaltemples.com என்ற யூ டியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.