பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவிலிலிருந்து திருமண் எடுக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஊத்துக்குளி ரோடு, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள, 1,000 ஆண்டுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.சுக்ரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்விக்கப்பட்டது. 108 முறை ராமநாமம் உச்சரித்து, பிரார்த்தனை நடத்தினர். அதன்பின், கோவிலில் திருமண் எடுத்து, அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.பரிஷத் மாநில கொள்கை பரப்பு செயலர் ரஜினிகாந்த் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம், மதுரை உட்பட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து, புனித மண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்தவர், சுக்ரீவர். அவர், ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து, வழிபட்ட ஸ்தலம், சுக்ரீஸ்வரர் கோவில். அதனால், ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவிலிலிருந்து, திருமண் எடுத்து, அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளோம், என்றனர்.