‘ என்னால் முடிந்த தர்மம் செய்யப் போகிறேன்’ என்றார் ஒரு மனிதர். அதற்காக இரவில் வெளியே வந்த அவர், திருடனுக்கு தெரியாமல் பொருளைக் கொடுத்து விட்டார். திருடனுக்கு தர்மம் செய்கிறாயே என மக்கள் கேட்டனர். ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்றார் அந்த மனிதனர். ‘ இனி சரியான நபருக்கு தர்மம் செய்வேன்’ என மனதிற்குள் முடிவு எடுத்தார். மறுநாள் தர்மம் செய்வதாகச் சொல்லி விலைமாதுக்கு வழங்கினார். இதை அறிந்தவர்கள் ‘விபச்சாரிக்கு தர்மம் கொடுத்தாயே’’ என ஏளனம் செய்தனர். இதைக் கேட்டு, ‘‘இறைவா! இனி சரியான நபருக்கு தர்மம் செய்வேன். எல்லாப் புகழும் உனக்கே’’ என்றார். மூன்றாவது முறையாக பணக்காரர் ஒருவருக்கு உதவினார். ‘‘சரியான நபருக்கு தர்மம் சேரவில்லையே’’ என சிலர் கூறினர். அப்போது வானவர் தோன்றி, ‘‘ திருடனுக்குக் கொடுத்ததால் அவன் திருந்தலாம். விலைமாதுக்கு கொடுத்த தர்மத்தால், அவள் அதிலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது. பணக்காரனுக்கு கொடுத்த செல்வத்தை அவன் தர்மம் செய்யலாம். தர்மம் கொடுப்பதால் தீயவர்கள் திருந்த வாய்ப்புண்டு’’ என்றார். தர்மம் கொடுப்பதால் தீயவர்களும் கூட நல்லவர்களாக திருந்த வாய்ப்புண்டு.