ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். தன்னுடைய ராமாயணச் சொற்பொழிவு சிறப்பாக நிறைவு பெற்றதாக சுவாமிகளிடம் தெரிவித்தார். ‘‘ராமாயணத்தை எதுவரை சொன்னீர்கள்?’’ எனக் கேட்டார் சுவாமிகள். ‘‘ பட்டாபிஷேகம் வரை சொன்னேன். அது தானே வழக்கம்?’’ என்றார் சொற்பொழிவாளர். ‘‘ அப்படியானால் ராமாயணம் இன்னும் முழுமை பெறவில்லை என்றே பொருள்.யுத்த காண்டம் வரைதான் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் உத்தரகாண்டம் மிச்சம் இருக்கிறதே? ராமாயண சொற்பொழிவில் பட்டாபிஷேகம் வரை சொல்கிறார்கள். ராமன் இந்த பூமியை விட்டு சரயூ நதியில் இறங்கி வைகுண்டம் போனதெல்லாம் உத்தரகாண்டத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. ராமன் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும், வைகுண்டம் போக கூடாது என்பதற்காக உத்தரகாண்டம் சொல்வதில்லை. பாராயணம் செய்பவர்களும் உத்தரகாண்டத்தை விட்டு விடுகிறார்கள். ஆனால் உத்தரகாண்டத்தில் அபூர்வ விஷயங்கள் பல உள்ளன. ராம ராஜ்யம் என்கிறோமே அவ்வளவு பெருமை ராமபிரானுக்கு மட்டுமே! வேறு யாரும் தர்மம் தவறாமல் ஆட்சி செய்ததில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ‘செய்திருக்கிறார்கள்’ என்பது தான் சரியான பதில். ஆனால் சாமான்ய குடிமகன் குற்றம் சொன்னதற்காக, தர்ம பத்தினியை தியாகம் செய்தவன் ராமன் ஒருவனே. வேறு யாரும் அப்படி செய்ததில்லை. உத்தரகாண்டத்தால் தான் ராமனுக்கு ‘ராஜாராமன்’ என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஒரு ராஜா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமன் வாழ்ந்து காட்டிய காண்டம் அது. எனவே சொற்பொழிவில் உத்தரகாண்டம் இடம் பெறுவதே சிறப்பு. ஒருவீட்டில் இறப்பு நேர்ந்தாலோ அல்லது இறக்கும் தறுவாயில் ஒருவர் இருந்தாலோ வலியச் சென்று 1008 தடவை ராம நாமம் சொல்லிவிட்டு வரவேண்டும். இதனால் அந்த ஆத்மா முக்தி பெறும். இது ஜீவாத்ம கைங்கர்யம். அந்த காலத்தில் கடிதம் அல்லது விண்ணப்பம் எழுதினால் பிள்ளையார் சுழியிட்டு ‘ஸ்ரீராம ஜயம்’ என்று எழுதிய பின்னரே பிறகு மற்ற விபரங்கள் எழுதுவர். இப்போதும் வீடுகளில் ராமாயணப் புத்தகத்தை பூஜையில் வைக்கிறார்கள். தினமும் படிக்காவிட்டாலும் கூட விளக்கேற்றி பூவும், துளசியும் இட்டு வழிபடுகிறார்கள். அந்தளவுக்கு ராமாயணம் நம் கலாச்சாரத்தில் கலந்திருக்கிறது. இனியாவது ராமாயண சொற்பொழிவில் உத்தரகாண்டத்தைச் சேர்த்து சொல்லுங்கள்’’ என தெரிவித்தார். சொற்பொழிவாளரும் அதை ஏற்பதாகச் சொல்லி மகாசுவாமிகளை வணங்கி விடைபெற்றார்.