தர்மத்தைப் பின்பற்றி வாழ்வதே சிறந்த வாழ்வு என்று குறிப்பிடுகிறார் சிருங்கேரி சுவாமிகள். மனிதனுக்கு பொன், பெண் ஆகிய இரண்டு விஷயத்தில் பேராசை ஏற்படுகிறது. இந்த இரண்டிலும் ஆசை இல்லாதவனே உத்தமன். அவனே தர்மப்படி வாழ்வதில் ஈடுபாடு கொண்டிருப்பான். தர்மத்தின் மூலமாக மட்டுமே மனிதன் நிரந்தர சுகம் பெற முடியும். ஒவ்வொருவரும் தனக்குத் தானே நன்மையைத் தேடி கொள்ள எண்ணினால், தர்மப்படி வாழ்வது ஒன்றே வழி. வாழும் காலத்தில் செய்த தர்மத்தின் புண்ணிய பலன் இறந்த பின்னும் ஒருவரைத் தொடர்ந்து வரும். வேறு யாரும் உங்களுக்கு அப்போது உதவி செய்ய முடியாது. ஒரு நற்செயலைச் செய்ய இப்போது புத்தி வந்து விட்டது என்றால் அதை உடனே செய்து விட்டால் சரி! நாளை செய்து கொள்ளலாம் என்று இருந்து விடக்கூடாது. அதனால் தர்மத்தை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விட்டால் தாமதப்படுத்தக் கூடாது. கட்டிய வீடு, வாங்கிய நிலம், பொன், பணம் ஆகியவை எல்லாம் நமக்கு ஒரு நாளும் சொந்தமாகாது. நாம் செய்த தர்மம் மட்டுமே மரணத்திற்கு அப்பாலும் கூடவரும். தர்மத்தை பின்பற்றி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வு இத்தகைய அருளுரையை உதிர்த்த சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி நாளை (மே 17) காலை 10-12 வரை ராமநாதபுரம் அரண்மனையில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். போன் 94431 68916. மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கர மடம் செல்கிறார்.