பதிவு செய்த நாள்
18
ஆக
2020
01:08
கள்ளக்குறிச்சி : விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டைக்கு தடை விதிக்கப்பட்டதால், தயாரிக்கப்பட்ட சிலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், சிலை தயாரிப்பு பணி முடங்கியது. இதில், ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஊர் பொது இடங்களிலும், விநாயகர் கோவில்களுக்கு முன்பும் 3 அடி முதல் 10 அடி உயரத்திற்கும் மேல் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து வழிபடுவர்.தொடர்ந்து 3ம் நாள் முதல் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, நீர் நிலைகள் மற்றும் கடலில் விஜர்சனம் செய்வது வழக்கம்.
விழாவிற்காக, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசூர், அய்யங்கோவில்பட்டு, சித்தலிங்கமடம், மடப்பட்டு, பேரங்கியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாரித்து ஆண்டுதோறும் விற்பனை செய்யப்படும்.ரசாயனம் ஏதுமின்றி தண்ணீர் மாசு அடையாத வகையில் எளிதில் கரையக்கூடிய பேப்பர் கூழ், கிழங்கு மாவு, கல்லு மாவு, பசை மாவு போன்ற மூலப் பொருட்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சிலைகள் தயாரிப்பு தொழிலை நம்பி 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கிருந்து ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் திருப்பூர், கோயம்புத்துார், உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை அதிகரித்து வருவதால், சிலைகளும் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. சிலை தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் துவங்கி சிலைகள் வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர், விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆர்டர் பெற்று சிலைகளை விற்பனை செய்வது வழக்கமாகும். இந்தாண்டு வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. சிலை தயாரிப்பு நிறுவனம் வழக்கம் போல் சிலைகளை வடிவமைத்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்தனர்.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை எளிமையாக கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில், பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட தடை விதித்து, வீட்டில் சிறிய சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது விநாயகர் சிலைகள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அரசின் உத்தரவால் விற்பனையின்றி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் குடோன்களிலேயே தேக்கமடைந்துள்ளன.இதனால், சிலைகள் உற்பத்தி நிறுவனத்திற்கு பல லட்ச ரூபாய் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிலைகள் விற்பனை செய்யக்கூடாது என்ற போலீசாரின் கடும் கெடுபிடியால் சிலை தயாரிப்பு உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தயாரித்த சிலைகளை என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகின்றனர்.