பதிவு செய்த நாள்
20
ஆக
2020
01:08
தஞ்சாவூர், தஞ்சையில் வரும் 22ம் தேதி ஸ்ரீராமகிருஷண மடத்தின் புதிய கிளை தொடங்கப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள பேலுாரை தலைமையிடமாக கொண்டு தமது குருதேவர் பெயரில் சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், கடந்த 1897ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி உருவாக்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராமகிருஷ்ண மடம் இப்போது உலகளாவிய வகையில் 214 கிளைகளைக் கொண்டு விளங்குகிறது. ராமகிருஷ்ண மடம் நாடெங்கிலும் பரந்து விரிந்து மக்கள் பணியாற்றி வரும் நிலையில், வரலாற்று முக்கியத்துவமும், ஆன்மிக பலமும் கொண்ட தஞ்சைப் பகுதியில் அந்த அமைப்பின் கிளை இல்லாதது பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரும் குறையாகவே இருந்து வந்தது.
அந்தக் குறையை நீக்கும் வகையில் தஞ்சை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் அருகே கடந்த 26 ஆண்டுகளாக செயல்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண- விவேகானந்த கல்வி அறக்கட்டளை தற்போது அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவாஜி நகரில் புதிதாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் கோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து தஞ்சை தரணியில் கல்வி , மருத்துவம், மற்றும் ஆன்மிகம் மூலமாக பல்வேறு சமுதாய நலப் பணிகளை தொடர உள்ளது. உலகலாவிய ராமகிருஷ்ண மடத்தின் பொது தலைவராக உள்ள ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்த மஹராஜ் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், மேலும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தர் கூறுகையில், வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று தஞ்சாவூர் சிவாஜி நகர் புதிய ராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டு அதன் மூலம் மக்களுக்கும் இறைவனுக்குமான சேவையினை மேலும் பரப்ப உள்ளது. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் கிளையாக செயல்படும் தஞ்சை ராமகிருஷ்ண மடத்தின் தொடக்க விழாவில் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவரும், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மஹராஜ் காணொலி காட்சி மூலம் மடத்தினை திறந்து வைத்து ஆசி வழங்குகிறார். சிவாஜி நகர் ராமகிருஷ்ண மடம் திறப்பு விழா மற்றும் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 22ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்கள் பெருமக்கள் வேதகோஷம் முழங்க கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, ஹோமம், பஜனைகளும், தேவி மஹாத்மியம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விளக்கு பூஜை, அன்னதானம் நடக்கிறது. புதிய மடம் திறப்பு விழா பொதுமக்களின் நலன் கருதி எளிமையான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் இல்லங்களிலிருந்து https://youtu.be/pQeP_2-c61o இணையதளத்தின் மூலம் நேரலையில் (காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை) நிகழ்ச்சிகளை காணலாம்.
தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை முகாம்கள், ஆரோக்கிய பயிற்சிகள், யோகாசனம், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்காக மருத்துவ சேவை, ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், சிறுவர்களுக்கு ஒழுக்கம், சமயம் மற்றும் கலாச்சார பண்பாட்டு பயிற்சிகள், பக்தர்களுக்கு பூஜை, பஜனை, ஆன்மீக உரைகள், சத்சங்கங்கள், ஆன்மீக பண்பாட்டு நூல்கள் விற்பனை, மேலும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்குகள் போன்ற சேவைப் பணிகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த 1925ம் ஆண்டு தஞ்சாவூரில் ராமகிருஷ்ண இயக்கப் பணிகள் தொடங்கிய பகுதிக்கு நேரெதிரே சிவாஜி நகரில் புதிய ராமகிருஷ்ண மடம் எதிர்பாராத விதமாக பகவான் ராமகிருஷ்ணரின் திருவுள்ளம் பாங்கின் வண்ணம் உருவாகியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் அளித்துள்ளது என்றார்.