பதிவு செய்த நாள்
21
ஆக
2020
01:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததும், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதுமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல்பெற்ற இந்த ஆலயம், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றானதாகும். குங்கிலியக்கலயநாயனார், காரிநாயனார் வாழந்த இந்த ஆலயம், பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த புராண வரலாறு உடையதாகும். அபிராமி பட்டருக்காக தை அமாவாசையன்று அம்பாள் முழுநிலவு தோன்றச்செய்ததாக ஆலய புராணம் கூறுகின்றது. இங்கு, 60 வயது, 70வயது, 80வயது, 100வயதுகளில் செய்யும் ஆயுஷ் ஹோமங்கள், சஷ்டியப்தபூர்த்தி துவங்கி சதாபிஷேகம் வரையில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 1997ம் ஆண்டு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பாபிஷேகம் செய்வதற்கான பாலாலய திருப்பணிகள் இன்று துவங்கியது. பக்தர்கள் பங்களிப்புடன் 11கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேகம் செய்ய தருமபுர ஆதீனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பாலாலய பூஜையில் வாஸ்துசாந்தி, நவகிரக பூஜைகள் இன்று நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அபிராமி அம்மனுக்கு நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டிருந்தது. மஹாதீபாராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.