வானூர்:கிளியனூர் திரவுபதியம்மன், கூத்தாண்டவர் சாமி தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கிளியனூர் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர், திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. கடந்த 11ம் தேதி திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், 12ம் தேதி கரக உற்சவமும், 13ம் தேதி தபசு உற்சவம், அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து நடந்த தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 15ம் தேதி கூத்தாண்டவர் சாமி சிரசு ஊர்வலம் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கூத்தாண்டவர் சாமி வீதியுலா நடந்தது. மாலை 4 மணிக்கு சாமி மாவேட்டிகுளம் அருகில் உள்ள அழுகளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் தாலி அறுத்தும், வளையல்களை உடைத்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.விழாவில் கிளியனூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்துக்கொண்டு வேர்கடலை, மிளகாய், மரவள்ளி கிழங்கு, அவரை, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை சாமிக்கு மயான கொள்ளைவிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று(17ம் தேதி) பட்டாபிஷேகம் மற்றும் சாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.