பதிவு செய்த நாள்
18
மே
2012
10:05
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மனை குளிர்விக்கும் வகையில், கருவறை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழியில், தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. திருச்சி சமயபுரத்தில், அக்னி பிழம்பான காளியம்மன், கிழக்கு நோக்கி அமர்ந்ததால், மாரியம்மனாக மாறி, சாந்த சொரூபியாக அமர்ந்திருக்கிறாள் என நம்பப்படுகிறது. மாரியம்மன் உஷ்ணமானவள் என்பதால், அவளை குளிர்விக்க நீர், மோர், பானகம் வைத்து படைத்து, "குளுமை விழா கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திர வெயில், திருச்சியில், 105 டிகிரியை தாண்டியுள்ளது. தகிக்கும் வெயிலில் தார்ச்சாலைகள் உருகி ஓடுகின்றன; அனல் காற்று வீசுகிறது. எனவே, வெயிலினால் அம்மனுக்கு உஷ்ணம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக, அம்மனின் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழியில், 24 மணி நேரமும், தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அம்மனை வேண்டி, முதன்முதலாக கிணறு வெட்டும் விவசாயிகள், தங்களது கிணற்றில் முதல் தண்ணீரை எடுத்து வைத்து, இந்த அகழியில் ஊற்றி, அம்மனை குளிர்ச்சிப்படுத்துகின்றனர்.