சிலர் நுாலகத்தில் வாங்கிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு காணாமல் போய் விடுவர். சிலர் நண்பர்களிடம் வாங்கிய புத்தகத்தை திருப்பிக் கொடுக்க விரும்புவதில்லை. பக்கத்து வீட்டினர் பண்டங்கள் கொடுத்தனுப்பிய பாத்திரத்தை திருப்பித் தர மனமில்லாமல் சிலர் இருப்பதுண்டு. இதெல்லாம் கூடாது என்கிறது இஸ்லாம். ஒருவரிடம் இரவல் வாங்கிய பொருளை பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்து விட வேண்டும். நீண்ட நாள் வைத்துக் கொண்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது. அந்த காலத்தில் அரேபிய மக்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. ஒருவரின் வீட்டுக்கு திடீரென உறவினர்கள் வந்தால் பாலை கறப்பதற்காக ‘மின்ஹா’ வை இரவலாகத் தருவர். அதனிடம் பாலைக் கறந்து கொண்டு, அதை கொடுத்தவரிடம் உடனடியாக திருப்பிக் கொடுத்து விட வேண்டும் ‘மின்ஹா’ என்றால் பெண் ஒட்டகம். வாங்கிய பொருளை உரியவரிடம் திருப்பி தருபவரே நல்ல மனிதர்.