பதிவு செய்த நாள்
30
ஆக
2020
03:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சியை போக்க மாதம் மும்மாரி மழை பொழிந்து இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் முன்னோர்கள் கோயில்களில் காப்புக்காடுகளை உருவாக்கியுள்ளதை தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளனர்.
இயற்கைச் சூழலைப் பாதுகாக்க தமிழர்கள் மருத்துவக் குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களைப் பெருக்கவும், மாதம் மும்மாரி மழை பெய்ய, பழங்காலக் கோயில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இவை காப்புக்காடுகள் என அழைப்படுகின்றன. கோயில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் வறட்சியை போக்கும் வகையில், மழை பொழிய ஊர் தோறும் கோயில்களையும், அவற்றைசுற்றி காடுகளையும், முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:காப்புக்காடுகள் பருவ மழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன.
இக்காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாகக் கருதுவதால், அவற்றை கோவில் பணி களுக்காகக் கூட வெட்டுவதில்லை. இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல்வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்து கின்றனர். அய்யனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோயில்கள், மரங்கள் சூழ்ந்த காப்புக் காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆராய்ச்சியின் போது, அய்யனார், காளி கோவில்களில் உகாய், ஆதண்டை, ஆத்தி, மணிபூவந்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில அய்யனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனுார் அருகில் கீழ்ப்பெருங்கரை அய்யனார் கோயில், நரிப்பையூர் செவக்காட்டு அய்யனார்கோயில், போகலுார் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோயிலைசுற்றி பாதுகாப்பு அரணாக நிற்கின்றன.
வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் பல அரியவகை மரங்கள் செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோயில்களில் காணமுடிகிறது. இதன் பெருமையை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அழித்துவிடாமல்பாதுாக்க வேண்டும், மேலும் அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.