நாளை ராகு – கேது பெயர்ச்சி: கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2020 05:08
திருக்கோவிலூர்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றி அறுபது நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்களை திறக்க, கடுமையான வழி காட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக நாளை கோயில்கள் திறக்கப்படுகின்றன.
திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவில், அட்டவீரட்டானங்களில் ஒன்றான கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடை திறப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி சார்பில் இரண்டு கோவில்களிலும், கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமையில், துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமாரன், துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன் மேற்பார்வையில், தூய்மைப் பணியாளர்கள் கோவில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இன்று ராகு கேது பெயர்ச்சி, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு ரிஷபத்திற்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது விருச்சிகத்திற்கும் 2020 செப்.1 ல் பகல் 2:05 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2022 மார்ச் 21 வரை இங்கு தங்கியிருப்பர். இத்தினத்தில் கோவில் நடை திறக்கப்படுவதால் நோய் பரவல் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்ச்சி நடப்பதால் பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருக்கோவிலூரில் நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவில், அட்டவீரட்டானங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் கோவில் நடைதிறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது.