பதிவு செய்த நாள்
01
செப்
2020
09:09
திருவண்ணாமலை; ஊரடங்கு தளர்வால், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று தமிழகம் முழுதும் கோவில்கள் திறக்கப்படுகின்றன. ஆயினும், திருவண்ணாமலையில் இன்று, பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று முதல், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள், அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம், இன்று காலை, 10:15 முதல், நாளை காலை, 11:08 வரை பவுர்ணமி திதி உள்ளது.அண்ணாமலையார் கோவில் திறக்கப்படும் நிலையில், கிரிவலத்துக்கு அனுமதி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு, பக்தர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், கொரோனா பரவலை தடுக்க, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆறாவது மாதமாக, கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சதுரகிரியில் அனுமதிவிருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்றும், நாளையும் காலை, 7:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, தாணிப்பாறை கேட் அருகே, தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை சோதித்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வாசலிலும், தெர்மல் ஸ்கேனர் டெஸ்ட் செய்து, அனுமதிக்கப்படுவர்.தரிசனத்துக்கு பின், உடனடியாக கீழிறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்குவதற்கு அனுமதியில்லை. குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என, அறநிலையத் துறை, வேண்டுகோள் விடுத்துள்ளது.