திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து, பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாக இருக்கிறேன். அதேபோல் இப்பூவுலகில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது இருவேறு அவதாரங்களின் தத்துவமாகும். தானத்தில் சிறந்த மகாபலி அதில் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்தை போக்க பகவான் எடுத்த முக்கிய அவதாரமாக இருக்கும் இவ்விரண்டு அவதாரங்களையும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் காணும் பாக்கியம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் சன்னதியில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதம். திருவோணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மகா வாமனர்க்கு திருமஞ்சனம் மாலை 5:00 மணிக்கு வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தனிமனித இடைவெளியுடன் விழா சிறப்பாக நடந்தது.