பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், தமிழக அரசின் உத்தரவின்படி, நேற்று கோவில்கள் திறக்கப்பட்டும், பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
கோவில்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், திருக்கோவிலில் சுவாமி சிலைகளை தொடக்கூடாது. அர்ச்சகர், கோவிலுக்கு வரும் பக்தர்களை தொட்டு குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம் மற்றும் இதர பிரசாதங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். விபூதி குங்குமம், பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருக்கோயிலுக்குள் வருவதை தவிர்க்க, அறிவுரைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள், தமிழக அரசால் வழங்கப்பட்டன.
நேற்று பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் மட்டும் திறக்கப்பட்டன. சில தனியார் கோவில்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மட்டும் நடந்தன. திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து விட்டனர். இதுவரை நித்திய பூஜை மட்டும் நடந்து வந்த சில கோவில்களில், நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான கோவில்களில் பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்பட்டது.