பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
ஈரோடு: கொரோனா ஊரடங்கு தளர்வில், ஈரோடு மாவட்டத்தில், 1,400 கோவில்கள், ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.
ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கோவில்களான ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களில், அதிகாலை கோபூஜை, கோபுர பூஜைகள் நடத்தப்பட்டன. அதையடுத்து கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதே போல கொங்காலம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், வ.உ.சி., பார்க் ஆஞ்சநேயர், வீரப்பன் சத்தரம் மாரியம்மன், வலசு மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும், திருஷ்டி கழித்து கோவில் நடை திறக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள அமல அன்னை தேவாலயம் திறக்கப்பட்டது. முக கவசம் அணியாதவர்களை, உள்ளே அனுமதிக்கவில்லை.
சென்னிமலை...: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டமில்லை. கோவில் நிர்வாகம் சார்பில், மலைக்கு பஸ் இயக்கப்பட்டது.
கோபியில்...: கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு, திருநீறு மண், மஞ்சள், குங்குமம் பொட்டலமாக வழங்கப்பட்டது. இதேபோல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி, பச்சமலை முருகன் கோவில்கள் நேற்று நடை திறக்கப்பட்டது. பச்சமலை முருகன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி பூஜை நடந்தது.
ராகு-கேது பெயர்ச்சி விழா: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சிவகிரி வேலாயுத சுவாமி கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. அக்னி குண்டம் வளர்த்து, ராகு, கேதுக்கு லட்சார்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதேசமயம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டதால், பூஜை, அபிஷேகம் நடந்தது.