பதிவு செய்த நாள்
04
செப்
2020
09:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க, ஆன்லைன் பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல், மீண்டும் இலவச லட்டு வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், ஐந்து மாதங்களுக்கு பின், செப்.,3 முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.
அம்மன் சன்னதி அஷ்டசக்தி மண்டபம் வழியாக, பக்தர்கள் கோவிலுக்கு சென்று, தரிசனம் முடிந்து, அதே வழியாக வெளியேறி வருகின்றனர்.பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இன்று முதல் கட்டண தரிசனம் செய்வோர், தெற்கு கோபுரம் வழியாக சென்று அம்மன், சுவாமியை தரிசித்து, அஷ்டசக்தி மண்டபம் வழியாக வெளியேற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, பக்தர்களுக்கு, கோவில் சார்பில் மீண்டும் இலவச லட்டு வழங்கப்படுகிறது.கட்டண தரிசனம், இலவச தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசிக்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணைகமிஷனர் செல்லத்துரை செய்துள்ளனர்.