சதுரகிரியில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2020 09:09
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். செப்.15 முதல் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மகாளய அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர். அதிகாலையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு திரண்டனர். காலை 6:45 மணி முதல் உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
வனதுர்க்கை, இரட்டை லிங்கம், பிலாவடி கருப்பசாமி கோயில்களில் வழிபட்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னிதிகளில் வரிசையில் நின்று நாகாபரணம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை தரிசித்தனர்.மலை அடிவாரத்தில் ஏராளமான டூவீலர், கார், வேன்களில் பக்தர்கள் வந்த நிலையில் போதியளவிற்கு போலீசார் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குறைந்தளவு பஸ்கள் இயக்கபட்டது. வத்திராயிருப்பு அரசு மருத்துவக்குழு பக்தர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தனர்.