பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான மக்கள், குளக்கரை, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, தானம் வழங்கினர். புரட்டாசி மாத அமாவாசை, முன்னோர்கள் பூமிக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்திய பதினைந்து நாட்களும், மஹாளய பட்ச காலமாகும். இக்காலம், முன்னோர் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மஹாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இந்தாண்டிற்கான மஹாளய பட்சம், 2ம் தேதி துவங்கியது.
மஹாளய அமாவாசை அன்று, நம் முன்னோர்கள் வீடுதேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. மஹாளய அமாவாசையன்று, சென்னை, புறநகரில் நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தானங்கள் செய்வது வழக்கம்.இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, வழிபாட்டு தலங்களில், ஐந்து மாதங்களுக்கு பின், பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. இதனால், வழிபாட்டு தலங்களில் உள்ள குளங்களில், கொரோனா தொற்று காரணமாக, மக்கள் கூடி தர்ப்பணம் செய்ய அறநிலையத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து கோவில் குளங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், மஹாளய அமாவாசையான நேற்று, மக்கள் கடற்கரை, கோவில் குளக்கரை மற்றும் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து, தானம் செய்தனர்.சில இடங்களில் கட்டுப்பாடு காரணமாக, பலர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அர்ச்சகர்கள், ஏழைகளுக்கு தானம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டை செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு! மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், ஆர்.கே.மடம் சாலையில், தர்ப்பணம் கொடுக்க, அதிகாலை முதல், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அங்கு, 50க்கும் மேற்பட்ட, தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், ஆர்.கே.மடம் சாலையில் மதியம், 12:00 மணி வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தர்ப்பணம் கொடுக்க வந்த மக்கள், இடைவெளி கடைப்பிடிக்காமல் குவிந்ததால், கொரோன தொற்று பரவும் அபாயம் நீடித்தது.