கம்பம் : கொரோனா கட்டுப்பாடுகளால் சுருளி அருவியில் அனுமதிக்கப்படாததால் மகாளய அமாவாசையான நேற்று ஏராளமானோர் சுருளியாற்றில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். சுருளி அருவியில் குளிக்க, முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர அதிகாலை முதல் நுாற்றுக் கணக்கானோர் திரண்டனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடு தடையால் அருவி நுழைவிடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு தடுக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் சுருளிப்பட்டி ஆற்றங்கரை, தொட்டாமான்துறை ஆற்றங்கரை உள்ளிட்ட பல இடங்களில் தர்ப்பணம் செய்தனர்.உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் காளாத்தீஸ்வர் உடனுறை ஞானாம்பிகை கோயில் முல்லையாற்று படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் முன்னோர்களுக்கு மோட்ச அர்ச்சனை செய்தனர். சுரபி நதிக்கரையில் குளித்து தர்ப்பணம் செய்தனர்.* மாவட்டத்தில் தேனி, கம்பம், போடி, பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களின் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.