பதிவு செய்த நாள்
22
செப்
2020
04:09
திருமதி. தேச.மங்கையர்க்கரசி
தனம், தான்யம், சந்தானம், தைரியம் என மகாலட்சுமி அருளால் குடும்பத்தில் அனைத்தும் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இதையே பெரியவர்கள் ‘இந்த குடும்பம் லட்சுமி கடாட்சமுடன் இருக்கிறது’ என்பார்கள். இந்த தெய்வீக நிலையை ஏற்படுத்தும் எளிய வழிபாடு பூரண கலச வழிபாடு.
விழாக் காலங்களில் கோயிலுக்கு வரும் மகான்கள், பெரியவர்களை வரவேற்க வைப்பது பூரண கலசம். வரலட்சுமி பூஜை, குபேர பூஜை, மகாலட்சுமி பூஜை என விசேஷ நாட்களில் கலச வழிபாடு செய்வர். இதை நிரந்தரமாக வீட்டில் பூஜித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். கலசத்தை இரண்டு விதமாக வைக்கலாம். ஒன்று நீர்க்கலசம். வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும். மற்றொன்று அரிசி கலசம். 3 மாதம் வரை வைக்கலாம்.
மண், பித்தளை, செம்பு, வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆனதாக கலசம் இருக்க வேண்டும். நீர், நெல் (அ) பச்சரிசி, தாம்பாளம், மட்டைத்தேங்காய் (அ) உரித்த தேங்காய், மாவிலை, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், வாசனை திரவியப் பொடி, ரவிக்கை துணி இவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.
கலசத்தை துாய்மைப்படுத்தி முடிந்தால் அதன் மீது நுால் சுற்றலாம்.ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதில் கலசம் வைத்து முக்கால் பகுதி நீர் ஊற்ற வேண்டும். மஞ்சள் துாள், வாசனை திரவியப்பொடி சேர்த்து அதன் மேலே மஞ்சள் தடவிய தேங்காய், மாவிலை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள், ரவிக்கைத்துணி சாத்த வேண்டும். கங்கை, ராமேஸ்வர தீர்த்தம் இருந்தால் நீரில் சிறிது சேர்க்கலாம். மகாலட்சுமி 108 போற்றி சொல்லி வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கல்கண்டு நெய்வேத்தியம் செய்து ‘மகாலட்சுமி தாயே! என் வீட்டில் நிரந்தரமாக எழுந்தருளி அருள்புரிய வேண்டும்’ என வழிபட வேண்டும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலையில் கலசத்தை புதுப்பிப்பது நல்லது. வாரம் ஒருமுறை புதுப்பிக்கும் போது நீரை கால் படாத இடத்தில் ஊற்றி வேண்டும். தேங்காயில் இனிப்பு பண்டம் செய்து சாப்பிடலாம்.
அரிசிகலசம் வைத்து வழிபடுபவர்கள் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி கலசம் வைத்து உள்ளே நீருக்கு பதிலாக பச்சரிசி முக்கால் பங்கு நிரப்பி அதில் விரலி மஞ்சள், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு, நாணயங்களை இட்டு மட்டைத் தேங்காயை மாவிலையோடு வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மேலே சொன்னபடி வழிபட வேண்டும். புதுப்பிக்கும்போது நாணயங்களை தானம் அளிக்கலாம். அரிசியில் பொங்கல், பாயசம் செய்யலாம் அல்லது எறும்புக்கு, மாடுகளுக்கு கொடுக்கலாம். 3 மாதம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் புதிய கலசம் அமைக்கலாம்.
அன்றாட பூஜையின் போது தெய்வங்களை எப்படி வழிபடுவோமோ அதில் ஒன்றாக கலசத்தை வழிபடலாம். பூஜையறை இல்லாவிட்டால் பூஜை செய்யும் அலமாரிக்கு கீழே பலகை அல்லது ஸ்டூல் மீது கலசம் வைக்கலாம்.
பூரண கலசம் வைத்திருக்கும் வீட்டில் பெண்கள் கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சஹஸ்ர நாமம் சொல்ல அலைமகள் அருளால் ஐஸ்வர்யம் பெருகும்.