பதிவு செய்த நாள்
01
மே
2026
08:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யத் தவறிய கோவில் நிர்வாகம்.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி சித்திரை தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து கடந்த 28,29 தேதிகளில் சோமாஸ்கந்தர் எழுந்தருளிய பெரிய தேரோட்டமும் மற்றும் 30ம் தேதி அம்மன் எழுந்தருளிய சிறிய தேர் ஆகியவை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இன்று மே தினம் மற்றும் சித்திரை பௌர்ணமி என இணைந்து வந்ததால், குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் காலை முதலே வரத் தொடங்கினர். இதில் கோவில் வெளிவளாகத்தில் அரசமர பிள்ளையார் சன்னதியில் தொடங்கிய பொது தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள்,கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் சன்னதி வரை சென்று,பிறகு வளைந்து மீண்டும் சபா மண்டபம் வரை நீடித்தது. இந்நிலையில்,கோவில் நிர்வாகம் 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்களை விட பொது தரிசனத்தில் காத்திருந்த பக்தர்கள் வரிசை விரைவாக செல்வதாக கூறி சிறப்பு தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள் அதிருப்தி அடைந்து,அங்கிருந்த கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து வரிசையில் இருந்து விலகி கோவில் ராஜகோபுரம் பகுதியில் கூட்டமாக குவியத் துவங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் 15 நிமிடங்களுக்கு மேல் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மேல் ஒருவர் விழத் துவங்கினர். அப்போது கோவில் உள் பிரகாரவளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசி போலீசார் எஸ்.ஐ.,கள் வேலுசாமி, பழனியம்மாள் உள்ளிட்ட போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்தனர்.
அதற்குள் கோவில் ஊழியர்கள்,பொது தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி திடீரென பக்தர்களின் வரிசையை,மாற்றி அமைத்தனர். இதனால் அம்மன் சன்னதி முன்பு தேர் விழாவிற்காக போடப்பட்டிருந்த செட்டின் கீழ் நிழலில் வரிசையில் நின்றிருந்த பக்தர்களை கடும் வெயிலில் 3 மணி நேரத்திற்கு மேல் கால்கடுக்க நிற்க வேண்டிய துயரத்திற்கு தள்ளினர். ஒரு கட்டத்தில் கோவில் ஊழியர்களால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் செய்வதறியாது திகைத்தனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூறும்போது: ஒவ்வொரு முறையும் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அதனை மனதில் கொண்டு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான வசதியை செய்து தர வேண்டும். கால் கடுக்க வெயிலில் நிற்க வேண்டிய சூழல் ஒவ்வொரு முறையும் லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறுகின்றது. நிழல் தரக்கூடிய சீட்டுகள், ட்ராலி செட்டுகள் போன்றவற்றை பல கோவில்களில் நிரந்தரமாக பக்தர்களின் வசதிக்காக பொருத்தியுள்ளனர். ஆனால் பல வருடங்களாக லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு என எந்தவித அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாக தரப்பில் செய்து தரவில்லை என்றனர்.
சித்திரை தேரோட்டம் 14 நாட்கள் விழாவாகும். இந்நிலையில் இன்று செயல் அலுவலர் விடுப்பில் இருந்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது என போலீசார் பலமுறை அழைத்த பிறகு வந்தார்.