கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா: பக்தர்கள் நடைபயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2026 02:05
தேனி: கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தேனி மாவட்டம் பளியங்குடி மலைப்பாதை திறக்கப்பட்டுள்ளது. பளியங்குடியில் இருந்து 6.6.கி.மீ தூரமுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் தங்களது நடைபயணத்தை துவக்கி உள்ளனர். இது தவிர கேரளாவின் குமுளியில் இருந்து ஜீப் மூலமாக பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கொக்கரக்கண்டம் மலைப்பாதையிலும் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள மாநில காவல்துறையினர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு சுகாதாரத்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். பளியங்குடி மலைச் சாலை வழியாக கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில் வழங்கப்படுகிறது. மேலும் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி என்பதால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்லாதவாறு வனத்துறையினரால் சோதனை செய்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.