பதிவு செய்த நாள்
23
செப்
2020
05:09
சென்னை : பூக்கடை, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் துவங்கும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், ஐந்து நாள் பாதயாத்திரையாகச் செல்லும். இதை, ஆண்டுதோறும், 20 லட்சம் பேர் தரிசிப்பர்.இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, திருக்குடை ஊர்வலம் தவிர்க்கப்பட்டது. செப்., 20ல், சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கு, எளிய முறையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருச்சானுார்பின், சென்னையில் இருந்து புறப்பட்ட திருக்குடைகள் செப்., 21ம் தேதி மாலை, திருப்பதி வந்து சேர்ந்தன. அதில், இரண்டு திருக்குடைகளை, திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஜான்சி ராணி மற்றும் உதவி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோரிடம், ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி சமர்ப்பித்தார். திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில், ஒன்பது திருக்குடைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. பின், திருக்குடைகளை, ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தான சேர்மன் சுப்பா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி ஆகியோரிடம், ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி நேற்று காலை சமர்ப்பித்தார்.ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையில், இந்த திருக்குடைகள் அலங்கரிக்கப்படும்.