பதிவு செய்த நாள்
24
செப்
2020
10:09
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தடுக்க, ஆவணங்களை, ஆன்-லைன் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதாது. அதையும் தாண்டி, இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என, பல்வேறு யோசனைகளை அரசுக்கு பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலம், கட்டடங்கள், நகைகள், சிலைகள், சொத்துகள், வெள்ளிப் பொருட்கள், பூஜை பொருட்களை முழுமையாக கணக்கெடுத்து, ஆன்-லைன் வழியே பதிவேற்றப்படுகின்றன. இதற்காக, நிக் எனப்படும் மத்திய அரசின், தேசிய தகவலியல் மையம் வாயிலாக மென்பொருள் தயாரிக்கப்பட்டு, முன் மாதிரி திட்டமாக, சென்னையில் உள்ள ஐந்து பிரசித்தி பெற்ற கோவில்களின் சொத்து ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
அடுத்ததாக, அனைத்து கோவில்களின் சொத்துகள், ஆவணங்களும்பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதுகுறித்த செயல் விளக்க கூட்டம், நிக் சார்பில், ஆன்-லைன் வழியாக நடந்தது.தேசிய தகவலியல் மையத்தை சேர்ந்த கோவிந்தன், கீதாராணி, மகாலட்சுமி ஆகியோர், ஆன்லைன் பதிவேற்ற பணிகளை விளக்கினர். அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர், திருப்பணி பிரிவு கூடுதல் கமிஷனர் வான்மதி, இணைக் கமிஷனர், துணைக் கமிஷனர், நிர்வாக செயல் அலுவலர்கள் பங்கேற்றனர். நிக் ஆலோசனைப்படி, தகவல்களை பதிவேற்றம் செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பக்தர்கள் எதிர்பார்ப்பு?: கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தடுக்க, ஆவணங்களை, ஆன்-லைன் பதிவேற்றம் செய்தால் மட்டும்போதாது, இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பக்தர்கள் தெரிவிக்கும் யோசனைகள்: ஆன்மிக பூமியான தமிழகத்தில் கோவில்களுக்கும், சுவாமிக்கும் சொத்துகளை தானமாக வழங்கும் வழக்கம், மன்னர்கள் காலம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கிறது. அந்த சொத்துகளை கொண்டு கோவில் திருப்பணிகள், பல்வேறு நற்பணிகள் நடந்தன. பிற்காலத்தில் செல்வந்தர்களும், வாரிசு இல்லாதவர்களும், தங்கள் சொத்துகளை கோவிலின் பெயரில் எழுதி வைக்கும் வழக்கமும் வந்தது.
இப்படி, தமிழகத்தில் ஒவ்வொரு புராதன கோவிலின் பெயரிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. பல சொத்துகள் அரசியல், அதிகார செல்வாக்கு மிக்கவர்களால் ஆக்கரமிக்கப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காணும் அறநிலையத் துறையின் புதிய முயற்சிகள் வரவேற்புக்குரியவை. எனினும், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கவும் பாதுகாக்கவும், இந்நடவடிக்கை மட்டுமே போதுமானது அல்ல. அறநிலையத் துறையின் புள்ளிவிபரப்படி, தமிழகத்தில் 38, ஆயிரத்து, 615 கோவில்கள் உள்ளன. இவற்றில், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்கள் ஏராளம். இவற்றின் சொத்துகள் மதிப்பிட முடியாதவை. ஆனால், கணிசமான சொத்துகள் அரசியல், அதிகாரம், பணபலம் மிக்கவர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டன.
இவற்றை மீட்கவும், மீதமுள்ள கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவும், அதிரடி நடவடிக்கைகள் அவசியம்.தனி அதிகாரிகள்மிகப்பழமை வாய்ந்த கோவில்களுக்கு, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஆனால், அதற்கான ஆதார ஆவணங்கள் பல சொத்துகளுக்கு இல்லை. இதனால், மூலப்பத்திரம் தயார் செய்து, கோவில் நிர்வாக அதிகாரியின் சுய உறுதி மொழிச் சான்று அடிப்படையில், பதிவுத்துறையிடம் ஆவணமாக பதிவு செய்து சொத்துடமை புத்தகத்தில், டைட்டில் ஆப் பிராப்பர்ட்டியின் கீழ் கொண்டு வந்து, கோவில் பெயரில் பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று பெற வேண்டும்.
இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்; இதுவே அவசர அவசியம். பதிவுத்துறையிடம் இருக்கும் கோவில் சொத்துகளுக்குகான பதிவேட்டில், குறைந்தபட்சம், 75 ஆண்டுகளுக்கான வில்லங்கச்சான்று சரி பார்க்க வேண்டும்.கோவில் நிலங்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களை கவனிக்க, அறநிலையத் துறையில், மாவட்டம் தோறும் தனி தாசில்தார் நியமிக்கப்பட வேண்டும். அறநிலையத் துறையின், 11 மண்டலங்களுக்கும் தலா ஒரு டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தவிர, அறநிலையத்துறை ஆணையரகத்தில் கோவில் நில மீட்பு விவகாரங்களை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இந்த அதிகாரிகள் அனைவரும், அறநிலையத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில், 1970ம் ஆண்டில், அறநிலையத்துறை கீழ் இருக்கும் கோவில்களுக்குச் சொந்த மான ஆக்கிரமிப்பிலுள்ள இடம், கட்டடம், விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கண்டறிந்து மதிப்பிட, மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்திலான, தனி அதிகாரியாக, செல்லையா நியமனம் செய்யப்பட்டார். கோவில் சொத்துகள் எங்கெங்கு ஆக்கிரமிப்பில் உள்ளன, எத்தனை சொத்துகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன, அவற்றின் மதிப்பு எவ்வளவு என, ஆய்வு செய்து, மாதம் தோறும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால், என்ன காரணத்தாலோ அந்த பணிகள் நடக்கவில்லை.
தனி நீதிமன்றம்: எம்.எல்.ஏ., - எம்.பி.,க் கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் இருப்பதை போல, கோவில் சொத்து தொடர்பான வழக்குகளை விசாரிக்க, பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.கோவில்கள் அதிக முள்ள தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மயிலாடுதுறை, காஞ்சி புரம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் தலா ஒரு நீதிமன்றமும், குறைவாக இருக்கும், நான்கு மாவட்டங்களுக்கு தலா ஒரு நீதிமன்றமும் அமைக்கலாம்.இதன் மூலம், இதுவரை கோவில்கள் இழந்த, 1.50 லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்க முடியும்.
ஒழுங்கு நடவடிக்கை: பதிவுத்துறையில் கோவில் நிலங்கள் மீட்பு பணிக்கென மாவட்டம்தோறும், தலா ஒரு மாவட்ட பதிவாளர் அந்தஸ்தில் பதவி உருவாக்கப்பட வேண்டும்.கோவில் சொத்துகளை, வேறு ஒருவர் பெயரில் முறைகேடாக பதிவு செய்து தரும் சார் பதிவாளர், பட்டா வழங்கிடும் வருவாய் அதிகாரி, கட்டடம் கட்ட அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர், தடையின்மை சான்று வழங்கும் தீயணைப்பு துறை அலுவலர் உள்ளிட்டோர் மீது, 17 பி சார்ஜ் மெமோ கொடுத்து, கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அறநிலையத்துறை சட்டம், பிரிவு, 34ன்படி, கோவில் நிலங்களை விற்பனை செய்து உரிமை மாற்றம் செய்தாலோ, அடமானம் வைத்தாலோ, அது, செல்லத்தக்கதல்ல என, அரசு அறிவிக்க முடியும்.அதேபோல, பதிவுத்துறை பதிவுச் சட்டம், 68 (2)ன்படி, இதை ரத்து செய்ய முடியும். ஆனால், என்னவோ, எந்த மாவட்ட பதிவாளரும், இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி, பதிவினை ரத்து செய்ததாக வரலாறு இல்லை.
தனி சட்டம்: கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்க, தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு சொத்து, கோவிலில் இருந்து, 3 கி.மீ., எல்லைக்குள் இருந்தால் உடனடியாக மீட்கப்பட வேண்டும்.அது, கோவில் வளர்ச்சிக்கு அவசியம்; 3 கி.மீ.,க்கு அப்பால் இருந்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டிருந்து அகற்ற முடியாத நிலை இருப்பின், நில வழிகாட்டி மதிப்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு தொகையும், கட்டட மதிப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு தொகையும் ஆக்கிரமிப்பாளரிடம் வசூலிக்க வேண்டும்.இந்த தொகையை, 10 ஆண்டுகள், பிக்சட் டிபாசிட்டாக, கோவில் பெயரில் வங்கியில் டிபாசிட் செய்யப்பட வேண்டும். வட்டிப்பணம், கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.இந்த வட்டி வருமானத்தில் இருந்து, அறநிலையத்துறைக்கு, 12 சதவீத பங்கு வழங்கத் தேவையில்லை.
தனி விஜிலென்ஸ்: கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் பதிவுத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, கட்டட அனுமதி வழங்கிடும் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்டம் தோறும் விஜிலென்ஸ் பிரிவு துவக்க வேண்டும்.அறநிலையத் துறைக்கான இந்த பிரத்யேக பிரிவு, மாநில விஜிலென்ஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்.மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாகவே, கோவில் சொத்து ஆக்கிர மிப்புகளை தடுக்கவும், கடந்த கால ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்கவும் முடியும்.இதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், மேற்கண்ட பக்தர்களின் கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அளித்தால், ஹிந்துக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர். - நமது சிறப்பு நிருபர் -