பதிவு செய்த நாள்
25
செப்
2020
05:09
திருப்பூர் கிருஷ்ணன்
மகான்கள் அனைவரும் பசிப்பிணி பற்றி சிந்தித்திருக்கின்றனர். அதைப் போக்குவது எப்படி என அவர்களின் கருணை உள்ளம் யோசித்திருக்கிறது.
‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்றார் மகாகவி பாரதியார். பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செல்லும் போது பசி தீர்க்கும் அட்சய பாத்திரம் ஒன்று திரவுபதிக்கு கிடைத்தது. அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் மூலம் பசித்தோருக்கு உணவிட்டாள் மணிமேகலை. வாடிய பயிரையும் கண்டு வாடிய வள்ளலார், பசிப்பிணி தீர அணையா அடுப்பை ஏற்றினார். நாடெங்கும் உள்ள கோயில்கள், மடங்களில் தினமும் அன்னதானம் நடக்கிறது.
இது பற்றி காஞ்சி மகாசுவாமிகள் அடிக்கடி பக்தர்களிடம் பேசியிருக்கிறார். திருமூலர் பாடிய திருமந்திரத்தில், ‘யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி’ என்னும் வரி அவரை மிகவும் கவர்ந்தது. அதன் அடிப்படையில் ‘பிடியரிசித் திட்டம்’ என்னும் முறையை உருவாக்கினார்.
வீட்டில் பெண்கள் சமைக்கும் முன் ஒரு கைப்பிடி அரிசியையும், நாணயம் ஒன்றையும் எடுத்து வைக்க வேண்டும். அந்த நாணயம் குறைந்த பட்சம் ஒரு ரூபாயாக இருந்தாலும் போதும். மாதக் கடைசியில் அரிசி, நாணயங்களை இத்திட்டத்தை செயல்படுத்தும் சேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சேகரித்த அரிசியை சமைத்து அந்தந்த ஊரிலுள்ள சிவன், பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுவாமிக்கு நிவேதனம் செய்த பின் அன்னதானம் செய்ய வேண்டும். சமைப்பதற்கு தேவையான எரிபொருள், காய்கறிகள், பால், தயிர், ஊறுகாய் போன்றவற்றிற்கு அரிசியுடன் கிடைத்த நாணயங்கள் ஈடுகட்டும்.
ஒரே நபரிடம் பெரும் தொகையை வாங்கி அன்னதானம் செய்வதில் பெருமை இல்லை. நடுத்தரக் குடும்பத்தினரும் சேவையில் பங்கேற்றால் தான் அவர்களுக்கும் புண்ணியம் சேரும்.
பிடியரிசி திட்டத்தை தன் வேண்டுகோளாக மகாசுவாமிகள் விடுக்க, பக்தர்கள் ஆர்வமுடன் செயல்படுத்தி வந்தனர். கொரோனா தொற்று பரவும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப, கிருமி நாசினி, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற வழிகாட்டுதலை பின்பற்றி பிடியரிசி திட்டத்தைச் செயல்படுத்த மகாசுவாமிகளின் பக்தர்கள் முன்வர வேண்டும்.