பதிவு செய்த நாள்
02
அக்
2020
05:10
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி, 3 சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில், புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில், விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமை நாளிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். புரட்டாசி மாதம் கடந்த இரண்டு வாரம் சனிக்கிழமையில், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில், வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதை அடுத்து, கோவில்களில் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி பிறப்பித்த உத்தரவில், இம்மாதம், 3, 10 மற்றும் 17ஆம் தேதி ஆகிய 3 மூன்று சனிக்கிழமைகளில், காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் சுவாமியை தரிசிக்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார். கோவில் நிர்வாகம், கோவில் முன்பாக மூன்று வாரங்களுக்கு, கோவிலின் உள்ளே பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றன, என அறிவிப்பு விடுத்துள்ளது.