திருஞானசம்பந்தநல்லூரான தனிச்சியம் பாகனூரான சோழவந்தான்: மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2020 05:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளில் ஊர்களின் பெயர்கள் சில மருவி வேறு பெயர்களில் இன்று அழைக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இக்கோயிலில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் தலைமையில் குழுவினர் ஓராண்டாக கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். கி.பி.13ம் நுாற்றாண்டில் தற்போதைய கோயில் கல்கட்டுமான பணி நடந்தது தெரிய வந்தது. மன்னர்கள் கோயிலுக்கு செய்த சேவை, பூஜைகள் தடையின்றி நடக்க நிலங்கள் கொடுக்கப்பட்ட விபரங்களை தான் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இதில் தற்போதைய சில ஊர்களின் பெயர் கல்வெட்டுகளில் வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிச்சியம், திருஞானசம்பந்தநல்லுார் என்றும், சோழவந்தான் சோழகுலாந்தக சதுர்வேதி மங்கலம் என்றும், கொடிமங்கலம் முடிகொண்ட சோழசதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சாந்தலிங்கம் கூறியதாவது: தனிச்சியத்தின் ஆதிகாலத்து பெயரே அதுதான். அதன் ஒருபகுதி திருஞானசம்பந்தநல்லுார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையில் அவர் மடம் ஒன்றை (மதுரை ஆதினம் மடம்) ஆரம்பித்தார். இதற்காக நிலங்கள் வழங்கப்பட்டன. அப்படி வழங்கப் பட்ட பகுதிக்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். சோழவந்தானின் ஆதிகாலத்து பெயர் பாகனுார். இதுதொடர்பான கல்வெட்டு செக்கானுாரணி அருகே கொங்கர் புளியங்குளத்தில் தமிழ் பிராமி கல்வெட்டில் உள்ளது. வீரபாண்டியன் என்ற மன்னன் கி.பி. 946 - 966 வரை மதுரையை ஆண்டான். சோழநாட்டில் படையெடுத்து உத்தமசீலி என்ற சிற்றரசனை வென்று தலையை வெட்டினான். இதனால் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். சோழர் குலத்திற்கு அழிவை ஏற்படுத்தியதால் சோழகுலாந்தகன் என்ற பெயரும் ஏற்பட்டது.தற்போதைய சோழவந்தான் பகுதியை பிராமணர்களுக்கு ஒதுக்கி கொடுத்து அதற்கு சோழசதுர்வேதி மங்கலம் என்று தன் பட்டப்பெயரை சூட்டினான். அதுவே தற்போது மருவி சோழவந்தான் ஆனது, என்றார்.