பதிவு செய்த நாள்
05
அக்
2020
11:10
டெஹ்ராடூன் : உத்தரகண்ட்டில் கேதார்நாத் உள்ளிட்ட 4 புனித தலங்களுக்கு (சார் தாம் யாத்திரை) செல்பவர்களுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தேவையான சுகாதார மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. ஊரடங்குகளில் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, மீண்டும் நாட்டின் பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயினும் மாநில மற்றும் கோவில்நிர்வாகங்கள் பாதுகாப்பு , சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க தொடர்ந்து, அறிவுறுத்துகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரையான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களில் பக்தர்களின் தினசரி எண்ணிக்கையை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாளை முதல் 4 புனித வழிபாட்டு தலங்களிலும் அனுமதிக்கப்பட்ட பக்தர்களுக்கான தினசரி வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடம், உணவு, கழிப்பறை மற்றும் சமூக தொலைவு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இ - பாஸ் வழங்கப்படும். 5 ஆம் கட்ட ஊரடங்குக்கு பிறகு, புனித தலங்களுக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததை தொடர்ந்து, இது அவசியம் என சார் தாம் தேவஸ்தானம் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீநாத் ராமன் கூறினார். பத்ரிநாத்துக்கு ஒரு நாளைக்கு வருபவர்களின் வரம்பு 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேதார்நாத்திலும் நாளை தொடங்கி அதே எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கங்கோத்ரியில் 900 யாத்ரீகர்கள் மற்றும் யமுனோத்ரிக்கு 700 யாத்ரீகர்கள் என இந்த எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு நாளைக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் மாநில அரசு ஒரு வரம்பை விதித்திருந்தது. யாத்ரீகர்களின் எண்ணிக்கை கேதார்நாத்துக்கு 800 பேர் , பத்ரிநாத்துக்கு 1200 பேர் , கங்கோத்ரிக்கு 600 பேர் மற்றும் யமுனோத்ரி சன்னதிக்கு 400 பேர் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதலின்படி, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற சுகாதார விதிமுறையை பின்பற்ற வேண்டும். யாத்ரீகர்கள் கோவிலில் நுழையும் முன் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை சோதிக்கப்படும். தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் யாத்திரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், கேதார்நாத்துக்கான இடைநிலை சேவைகள் அக்., 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். கடந்த ஆண்டு, 38 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இந்த 4 புனித தலங்களுக்கும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.