பதிவு செய்த நாள்
07
அக்
2020
02:10
புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பண்டிகைக் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மாதந்தோறும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாத இறுதியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, சுகாதார கட்டுப்பாடுகளுடன், பண்டிகைகள் கொண்டாடவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த மாத இறுதியிலிருந்து, நவராத்திரி, தீபாவளி, சாத் பூஜை உட்பட பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.பண்டிகை காலங்களில், கண்காட்சி மற்றும் கலாசார விழாக்களும் நடப்பது வழக்கம். இந்த நிகழ்வுகளின் போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
*கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில், பண்டிகை நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது. இங்கு வசிப்பவர்கள், வீடுகளுக்குள்ளேயே பண்டிகைகளை கொண்டாட அறிவுறுத்தப்படுகின்றனர்.
*விழாக்களை நடத்தும் முன், முழுமையாக திட்டமிடுதல் அவசியம்
* கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் சமூக இடைவெளி ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்
* விழாக்களில், பதிவு செய்யப்பட்ட பாடல்களை ஒலிபரப்பலாம், ஆனால், குழுவாக இணைந்து, மக்கள் பாடுவதைத் தவிர்க்க வேண்டும்= விழா நடக்கும் இடங்கள் விஸ்தாரமாக இருக்க வேண்டும். மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, மக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்
* விழாக்கள் நடக்கும் பகுதிகள் கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்
* விழாவில் பங்கேற்கும் அனைவரும், முக கவசங்களை அணிவது கட்டாயம்
* நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், மேடை கலைஞர்களுக்கும் முழுமையாகப் பொருந்தும்
* உடல் வெப்ப சோதனை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
* விழாவை ஒட்டி நடக்கும் ஊர்வலங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான மக்கள் பங்கேற்க கூடாது
* விழா பகுதிகளில் நுழைவு வாயிலும், வெளியேறும் வாயிலும் தனித்தனியாக இருக்க வேண்டும்
* மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள், கண்டிப்பாக செய்யப்பட்டு இருக்க வேண்டும்
* தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவை நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.